ஆக்லாந்து:
நான்கு நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி தொடரில், இந்திய பெண்கள் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்து, நான்காவது இடம் பிடித்தது.
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில், பெண்களுக்கான நான்கு நாடுகள் பங்கேற்கும் முதல் சுற்று ஹாக்கி தொடர் நடந்தது. "ரவுண்டு ராபின்' முறையில் நடந்த லீக் போட்டியில் ஒரு "டிரா', இரண்டு தோல்வியை பெற்ற இந்திய அணி, நேற்று நடந்த மூன்றாவது இடத்துக்கான போட்டியில், அமெரிக்காவை சந்தித்தது.
ஆட்டத்தின் 47வது நிமிடத்தில், அமெரிக்காவின் ஷனான் டெய்லர், "பெனால்டி கார்னர்' முறையில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய இந்திய அணிக்கு 56வது நிமிடத்தில், சன்சான் தாக்கோம் ஒரு "பீல்டு' கோல் அடித்து, பதிலடி கொடுத்தார்.
விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என சமநிலை வகித்தது. பின், கூடுதல் நேரத்தில் அமெரிக்க அணி கேப்டன் லாரன் கிராண்டல், "கோல்டன் கோல்' அடிக்க, 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அமெரிக்க அணி, வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய அணி, நான்காவது இடம் பிடித்து ஏமாற்றியது.
முதலிடத்துக்கான போட்டியில், நியூசிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தங்கம் வென்றது.
இந்த நான்கு அணிகள் பங்கேற்கும் இரண்டாவது சுற்று ஹாக்கி தொடர், ஏப்., 18-22ம் தேதிகளில் நியூசிலாந்தில் உள்ள பகுரங்காவில் நடக்கிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மோத உள்ளது.
No comments:
Post a Comment