ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் குறைந்த வயது வீரராக 10 வயது Dimitrios Loundras என்ற கிரேக்க நாட்டு இளைஞன் 1896 ஆம் ஆண்டு கலந்து கொண்டான் என்றால் அந்த நாட்டுக்கு எவ்வளவு பெருமை. ஆனால் இங்கு 13 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு சரியான உடற்கல்வி ஆசிரியர் கூட இல்லை. "ஐந்தில் வளையாதது ஐம்பதில் எப்படி வளையும்" என்ற பழமொழி ஞாபத்திற்கு வருகிறதா?
சீனாவில் இராணுவத்திற்கு பிறகு விளையாட்டுக்குத்தான் அதிகம் பணம் பட்ஜெட்டில் ஒதுக்குவார்கள். மருத்துவத்திற்கு கூட பிறகுதானம். ஏனெனில் அவர்கள் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அங்கு ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு விளையாட்டு மைதானம் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் உண்டு. அதனால் தான் அவர்கள் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் 50 தங்கப்பதக்கங்கள் வெல்ல முடிகிறது.
ஆனால் இங்கு 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தங்கம் வாங்க முடிகிறது. ஏனெனில் இங்கு விளையாட்டு மீது அரசுக்கு அக்கறை இல்லை. வீரர்களுக்கு சரியான அங்கிகாரம் இல்லை.
பாரதி சொன்னது போல் "சாம்பல் நிறமொரு குட்டி, கருஞ்சாந்தின் நிறமொரு குட்டி,... " - என்ற பாடலில் "குட்டிகள் எந்த நிறத்தில் இருந்தாலும், அவையாவும் அத்தாயிக்கு ஒன்றே ஆகும்". அது போல எந்த விளையாட்டானாலும் பேதமின்றி மதிக்கவும் ஊக்கப்படுத்தவும் வேண்டும். குறிப்பாக நம் நாட்டில் கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வேறு எந்த விளையாட்டுக்கும் கொடுக்கப்படுவதில்லை. ஊடகங்களும் இதே தவறைதான் செய்யது வருகின்றன.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள கூட தகுதியற்ற விளையாட்டு கிரிக்கெட் ஆகும். ஆனால் அந்த கிரிக்கெட் அணியும் சரி அந்த வீரர்களும் சரி தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடப்படுகின்றனர். ஆனால் நம் தேசிய விளையாட்டான ஹாக்கி (வளைகோல் பந்து) அணி ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் எட்டு முறை தங்க பதக்கம் வென்றுள்ளது. இது எட்டு உலக கோப்பைகளுக்கு சமம் ஆகும். இது மட்டுமல்ல ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் ஹாக்கி அணி பெற்றுள்ளது. 1928 முதல் 1980 வரை நம் நாட்டின் ஆதிக்கம் தான்.
கிரிக்கெட்டில் சாதனை புரிந்தால் அவர்களுக்கு வரும் பரிசுகளும் மரியாதைகளும் எத்தனை? எத்தனை? ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒழுங்கான ஊதியம் கூட தர அரசு சுணக்கம் காட்டுவது ஏன்? ஏறத்தாழ 120 கோடி மக்கள் வாழும் நம் நாட்டில் திறமை படைத்த வீரர்களுக்கா பஞ்சம். தகுதியை மட்டும் அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுத்தால் நம் வீரர்கள் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபித்து காட்டுவார்கள்.
(குறிப்பு : இக்கட்டுரையில் கிரிக்கெட் மற்றும் அந்த வீரர்களை பற்றி எழுதியதற்கு வருந்துகிறேன். எனது ஆதங்கம் அவர்கள் மீதல்ல அரசாங்கத்தின் மீதும், ஊடகங்கள் மீதும் தான். தயவு செய்து என்னை மன்னிக்கவும்.)
No comments:
Post a Comment